வாழ்ந்து போதீரே.....

சுந்தரர், தம்பிரான் தோழர் என்று அழைக்கப் படுபவர். இவரிடம் இவர் தோழர் படும் பாடு சொல்லி மாளாது. தன் முதல் பாடலிலேயே தன் தோழனை 'பித்தா' என்றுதான் அழைக்கிறார். அதன் பின் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று உரிமையோடு கேட்பதிலிருந்து தூது அனுப்புவது வரை தோழரைப் படுத்தும் பாடு..... அப்பப்பா... பாவம் அந்தத் தோழர்!

இவரப் பார்த்துப் பரிதாபப் பட்ட புலவரொருவர் பாடுகிறார் இப்படி,
வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கஇக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.
பாவம் அந்த அம்பலவானனுக்கு பெற்ற தாய் தந்தையர் இல்லாததனால் அல்லவோ இத்தனை அடிகளையும் வாங்கவேண்டி இருந்தது!

பாசுபதாஸ்திரம் கொடுக்கப்போய் அர்ஜுனனிடம் வில்லால் அடிவாங்கினார், செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார். சமணரான சாக்கிய நாயனாரோ தினமும் ஒருகல்லால் அவருக்கு அர்ச்சனை நடத்திய பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். அதன் பின் வந்திக்கு உதவி செய்யப்போய் பாண்டியனிடம் பிரம்படி வாங்கியது தனிக்கதை!

இன்னும் விட்டு வைத்தார்களா? இன்னொரு பாடல்,
தாண்டியொருத்தி தலையின்மேல் ஏறாளோ,
பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ? - மீண்டொருவன்
வையானோ, வில்முறிய மாட்டானோ, தென்புலியூர்
ஐயா, நீ ஏழையானால்?
நீ ஏழையாக இருந்தால், கங்கை போன்ற ஒருத்தி ஏன் தலையில் ஏறமாட்டாள்? இங்கே சுந்தரர் வைத்ததையும் சொல்கிறார் புலவர்.

இந்த சுந்தரர் செய்த சத்தியத்தை மீறியதால் கண்கள் குருடாகிவிட, காஞ்சிபுரத்து இறைவனை வழிபட்டு இடக்கண் பெற்றார். அதன்பின் திருவாரூர் இறைவனை வழிபடச்சென்று அங்கே பாடியது இந்தப் பாடல்.

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே

உம் அன்பர்களைத் துன்பத்தில் தள்ளிவிட்டு நீர் மட்டும் கோயிலின் உள்ளே சௌக்கியமாக இருமையா...
"வாழ்ந்து போதீரே....."

Comments