ஸிவான்விதாயை ச ஸிவான்விதாய....

அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்திரம் 

எப்போதோ தற்செயலாக பார்க்க நேர்ந்த இந்தப் பாடல் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. அப்படி ஒரு ஆயிரத்துச் சொச்சமாவது தடவையாகப் பார்த்தபோதுதான் ஆதிசங்கராச்சாரியாரின் அர்த்தநாரீஸ்வர ஸ்தோத்திரம் என்பது கண்ணில் பட்டது. அந்த வரிகளுடன் பாடலைப் பார்த்தபோது அது வேறோர் உலகுக்கு இட்டுச் சென்றது.

எந்த சாஸ்திரிய நடனத்திலும் பல ஆழங்களைத் தொடும் இந்தப் பாடல் எழுத முயலும் போது வார்த்தைகள் சிக்காமல் தவிக்க வைக்கிறது.



சாம்பேய கௌரார்த ஸரீரகாயை
கர்பூர கௌரார்த ஸரீரகாய ।
தம்மில்லகாயை ச ஜடாதராய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ||

சம்பங்கி மலரையொத்த பாதியுடல், தீயின் வடிவான மறுபாதியுடல். ஒருபுறம் அவளோ அலங்கரித்த அழகிய சிகை கொண்டிருக்கிறாள். மறுபுறமோ அவன் வெறும் ஜடாதாரி. அழகிய அலங்கரிக்கப்பட்ட சிகை - எண்ணையே காணாத வாரப்படாத தலை. இந்த இரு எதிர்த் துருவங்கள் இணைந்த வடிவான சிவையையும் சிவனையும் வணங்குகிறேன் என்று நமஸ்கரிக்கிறார். 

சம்பங்கி மலர் போன்ற மென்மையான பொன்னிற உடலுடையவளும் செந்நிறமான அக்கினியையே உடலாகக் கொண்டவனும், தீயில் மலர்ந்த மலர்போல்தோன்றும் காட்சி. தீயுடன் இணைந்திருந்தாலும் அவள் மலர்ந்திருக்கிறாள். தீயே வடிவாய் இருந்தாலும் அந்த மலரைப் பொசுக்கிவிடாதிருக்கிறான். இரண்டும் இருவேறு தன்மையைக் காட்டினாலும் இரண்டுமே வேறல்ல.


கஸ்தூரிகாகுங்குமசர்சிதாயை
சிதாரஜ꞉புஞ்ஜ விசர்சிதாய ।
க்ருதஸ்மராயை விக்ருதஸ்மராய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

முதலில் உடலை வர்ணித்தவர் அங்கிருந்து தோற்றத்திற்கு வருகிறார். கஸ்தூரியும் குங்குமமும் அணிந்த மங்கலத் தோற்றம். மற்றும் சுடலையில் பிணங்களை எரித்த சாம்பலைப் பூசும் இன்னொரு தோற்றம். அதை அமங்கலம் என்று தள்ளிவிடாது எடுத்து அணிந்திருக்கிறான். அவன் வரையில் மங்கலம் அமங்கலம் எல்லாம் ஒன்று தானோ..?  ஒருபுறம் வாழ்க்க்கையில் அழகையும் மங்கலத்தையும் வழங்கும் தோற்றம் கருணையுடன் புன்னகை புரிகிறது. மறுபுறம் அனைத்தையும் அவனே மறைக்கிறான். அந்தத் தோற்றமோ புலித்தோல் அணிந்து பயத்தை விளைவிக்கிறது. புலித்தோல், யானைத்தோல் என அணிந்திருப்பவனில் பயங்கரத்திற்கு என்ன குறைவு? போதாததற்கு முக்கண்ணுடன் கையில் அக்கினி வேறு. அதனால்தான் அவனை "ரூப பயங்கரன்" என்கின்றன நூல்கள் - "விக்ருதஸ்மராய".


ஜணத்க்வணத்கங்கணநூபுராயை
பாதாப்ஜராஜத்பணிநூபுராய ।
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

இனிய சந்தமெழுப்பும் கங்கணங்களும் சதங்கையும் அணிந்தவளொருபுறம். பாதாள நாகங்களைக் கழலாக அணிந்தவனொருபுறம். இனிமையும் பயங்கரமுமாய் ஒன்றிணைந்தவர்கள்! நாக கழல்கள் - அவன் பிறப்பு இறப்பென்ற பிறவிச் சுழலையே தன் காலடியில் வைத்திருப்பவன். இந்தப் பிரபஞ்ச இயக்கமே அவன் காலில் வெறும் கழல்கள்.


விஸாலநீலோத்பலலோசநாயை
விகாஸிபங்கேருஹலோசநாய ।
ஸமேக்ஷணாயை விஷமேக்ஷணாய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

நீலோத்பல மலர்களையொத்த நீண்ட கரிய விழிகள் கொண்டவள், தாமரை போன்ற அகன்ற செந்நிற விழிகள் கொண்டவனுடன் சேர்ந்திருக்கிறாள். நிலவில் மலர்வது நீலோத்பலம். தண்மையானது. அவள் விழிகளும் நிலவின் குளிர்மை கொண்டு கருணை பொழிபவை. சூரியனின் வெம்மை கண்டு மலர்வது தாமரை. பெண்ணின் கண்களை நீலோத்பலத்திற்கும் ஆணின் கண்களை செந்தாமரைக்கும் ஒப்பிடுவது கவி வழக்கானாலும், சங்கரர் இங்கே கூறும் விதத்தில் சிவையை நிலவுக்கும் சிவனை சுட்டெரிக்கும் சூரியனுக்கும் ஒப்பிடுவதாகவே தோன்றுகிறது. அவள் முகமென்ற நிலவில் மலர்ந்த நீலோத்பல விழிகளும், அவன் முகமென்ற சூரியனில் மலர்ந்த செந்தாமரை விழிகளும்...

சிவ ரூபத்தில் வலதுகண் சூரியனாகவும் இடதுகண் சந்திரனாகவும் வர்ணிக்கப் படுவதுண்டு. அதனால் இங்கே இடது பாதியாகிய சிவை குளிர்ந்த நீலோத்பல விழிகள் கொண்டிருக்கிறாள். அவள் பார்க்கத் திகட்டாத அழகிய இரு விழிகள் கொண்டவள். அவன் விசித்திரமான மூவிழியன்.


மந்தாரமாலாகலிதாலகாயை
கபாலமாலாங்கிதகந்தராய ।
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

தலையில் அழகிய மலர்களை அணிந்தவளுடன், வெறும் மண்டையோடுகளையே மாலையாக அணிந்தவன் இணைந்திருக்கிறான். மங்கலம் அளிப்பவளுடன், அனைத்தையும் அழிப்பவன். அதன் அடையாளமாக மண்டையோடுகளையே மாலையாய் அணிந்திருக்கிறான். அழகிய ஆடையணிகள் அணிந்தவளுடன் திகம்பரன் - அதாவது எதுவுமே அணியாதவன் அவன் - இணைந்திருக்கிறான்.

திகம்பரன் என்பது திசையாடை அணிந்தவன். திசைகள் மட்டுமே ஆடையாகும்படி எங்கும் வியாபித்திருப்பவன். எவ்வாறு ஒரு ஆடைக்குள் மட்டும் அடக்கமுடியும் அவனை? எதற்குள்ளும் அடக்கிவிட முடியாதவன்.


அம்போதரஸ்யாமளகுந்தலாயை
தடித்ப்ரபாதாம்ரஜடாதராய ।
நிரீஸ் வராயை நிகிலேஸ்வராய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

மழைதரும் முகில் போன்ற கரிய கூந்தலுடையவள் ஒருபுறம், மின்னலைப் போன்ற செந்நிற சடையை உடையவன் மறுபுறம். மலைகளின் அரசியும், ஈஸ்வரர்களுக்கெல்லாம் ஈஸ்வரனான பரமேஸ்வரனும். அந்த பரமேஸ்வரனுக்கும் அடிநாதமாக விளங்குபவள் ஈஸ்வரியேதான். அதனால் தான் அவள் கூந்தல் மழைதரும் முகிலாகிறது , அவன் சடை அந்த முக்கிலிலிருந்து தோன்றும் மின்னலாகிறது. அவள் மழைமுகில்போல் வாரிவழங்கி பிரபஞ்சத்தைப் பேணுகிறாள். அவன் மின்னல் போல் எங்கும் வியாபித்து ஒளியை நிறைத்து நின்றிருக்கிறான்.


ப்ரபஞ்சஸ்ருஷ்ட்யுந்முகலாஸ்யகாயை
ஸமஸ்தஸம்ஹாரகதாண்டவாய ।
ஜகஜ்ஜநந்யை ஜகதேகபித்ரே
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

அவள் தன் அழகிய நடனத்தில் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கிறாள். அவனோ தன் ஒரு தாண்டவத்தில் அனைத்தையும் அழிக்கிறான். அவள் தோற்றுவிப்பதற்காகவே அவன் அழிக்கிறான். அவள் பிறவியை தோற்றுவிப்பதற்காகவே அவன் உயிர்களுக்கு மரணத்தை அளிக்கிறான். இருவரும் இணைந்தே ஆடும் ஆடல் இது. இங்கே அவளே ஜகத் ஜனனியாகிய அன்னை, அவனே அனைத்திற்கும் காரணனான தந்தை - காலத்தையே உருவாக்கும் காரணன் - கால காலன்.


ப்ரதீப்தரத்நோஜ்ஜ்வலகுண்டலாயை
ஸ்புரந்மஹாபந்நகபூஷணாய ।
ஸிவாந்விதாயை ச ஸிவாந்விதாய
நம꞉ ஸிவாயை ச நம꞉ ஸிவாய ॥

ஒளிவீசும் குண்டலங்களை அணிந்தவள் ஒருபாதி, விஷத்தைக் கக்கும் நாகத்தை அணிந்தவன் மறுபாதி. ஒருபுறம் ஒளியைக் கொண்டவள். அவள் குண்டலங்களே பிரபஞ்சத்தின் ஒளியாகிறது. மறுபுறம் இருளே உருவான நாகங்கள். இருளும் ஒளியுமாக இணைந்தவர்கள். சிவைக்குள் உறையும் சிவன், சிவனுக்குள் உறையும் சிவை. இருவருமே வேறுவேறல்ல. ஒருவருள் ஒருவராக எங்கும் வியாபித்திருப்பவர்கள்.


ஏதத்படேதஷ்டகமிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மாந்யோ புவி தீர்கஜீவீ ।
ப்ராப்நோதி ஸௌபாக்யமநந்தகாலம்
பூயாத்ஸதா தஸ்ய ஸமஸ்தஸித்தி꞉ ॥

பல ஸ்துதி. பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களைக் கூறுகிறது. இந்தப் பாடல்களை அனுபவிப்பதை விடவும் வேறென்ன பலன் வேண்டியிருக்கிறது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

ஒவ்வொருமுறை கேட்க்கும்போதும் புதுப் புது அனுபவத்தைக் கொடுக்கிறது பாடல். ஒவ்வொரு எதிரெதிர் சக்திகளாகவே வர்ணித்த படி வந்து "ஸிவான்விதாயை ச ஸிவான்விதாய" என முத்தாய்ப்பு வைக்கிறார் ஆதிசங்கரர். அனைத்துமே ஒன்றுதானே. மங்கலம் என்பதும், அமங்கலம் என்பதும், அழகு என்பதும், அலங்கோலம் என்பதும், பிறப்பு என்பதும், இறப்பு என்பதும் அனைத்துமே ஒரே புள்ளியில் தொடங்கி மறைவதேயல்லவா?


Comments